27.7.11

சற்றுமுன்பு மற்றும் இப்பொழுது




கவிதை வீசாதிருந்ததில்
வியர்த்துக்கொட்ட
சற்று முன் வரை
ஒவ்வாமையின் பிடியிலிருந்த
வெற்றுத்தாளிது,
பேரமைதி சலனித்துவிடாமல்
படபடக்கிறது
பட்டாம்பூச்சியொன்று
விசிறிப்போன கவிதை
சில்லிடலில் சிலிர்த்து.


25.7.11

காட்சி, கிளைக்காட்சி






சிற்றலைகளை பற்றிக்கொண்டு
வெளியேற முனைகிறது
எறியப்பட்ட கல்லொன்றின்
மோதலுக்கு
துணுக்குற்ற கிணற்று நீர்

கிளைக்காட்சியில்,
நொறுங்குகின்றன
சதுரம் தாண்ட முயன்று
சில வட்டங்கள்

இடைநில்லாது இசைக்கிறது



சற்றே அலைவுற்றதன் முடிவில்
வடக்கில் நிலைகொள்கிறது
கையடக்க திசைமானியின்
காந்த ஊசி



சில நொடிகள்
இடவலமாய் அசைந்திருந்த
திக்குகள் ஒன்றும்
பாடித்திரியும்
அச்சாதகப்பறவை மீது
சிராய்த்துவிட்டிருக்கவில்லை

21.7.11

பிள்ளைகள் ரயில்



பாதங்களில்
சக்கரங்கள் பூட்டிய பாவனைகளில்
பிள்ளைகளே
பெட்டிகளும் பயணிகளுமானதில்
உருள்கிறதொரு தொடர்வண்டி

ஓட்டுநனின் மனம் போன பாதைகளை
தண்டவாளமெனப்பற்றி
அனாயாசமாய் கடக்கிறதது
மெட்ராஸ்
டில்லி
பாம்பே
கல்கத்தா நிலையங்களை

எந்தவூரில்
அதிகம் பனிப்பொழிவிருந்ததெனத்தெரியவில்லை

"அவசரமா ஒண்ணுக்கு போகணும்" என்று
வெளியேறுகிறான் ஒரு பிள்ளை
அல்லது
ஒரு பயணி
அல்லது
கழன்றுகொள்கிறது ஒரு பெட்டி

20.7.11

யானை



 நின்றால் கோவில் முன்றில்
கிடந்தால் சுற்றுச்சுவரோர
கொட்டிலென்றான
யானைக்கெப்போதும் விருப்பம்
கானக வாசம்

ஆசி பெறவென
மனிதர் திரள் முன்னிற்கையில்
அது தன் கூட்டத்தை
நினைத்துக்கொள்கிறது

தூண்கள் தாங்கும்
கூரையினடியிலிருந்து
அது தன் அடவியின்
முடிவுறாத பச்சை வானத்தை
மனத்தின்கண்
மீள் பார்வை பார்க்கிறது

நீளம் காலம் அறிந்திராததும்
திசைகளை கணக்கில் கொண்டிராததுமான
முன்னாட்களின் பயணங்களை
நின்றவிடத்திலிருந்து அசைபோடுகிறது

மழை நாளில் மட்டும்
கொட்டிலோரம்
கொஞ்சம் தேங்கும் நீரில் தோன்றும்
இன்னொரு யானை
 இதனைத்தேற்றுகிறது

15.7.11

ஆசிர்வதிக்கப்பட்டவர்க்கே கட்புலனாகும் இரண்டு நிலாக்கள்




கிண்ணங்களோடு
நிரம்பித்தளும்பும்
திராட்ச மதுவை
தீர்த்தமென தொண்டையில்
சரித்துக்கொள்ளுமக்கணம்தான்
ஆசிர்வாதம் நம்மீது
அடைமழையெனப்பொழிவது.


ஆசிர்வாதத்தின் அழுத்தம் தாளாமல்
தரையில் மல்லாந்து
கண்களால்
இரவு வானத்தை வெறிக்கையில்
இப்படித்தோன்றுகிறது நமக்கு,


அந்த இரண்டு நிலாக்கள்
நமக்கே கட்புலனாதல் போல்
வேறெவர்க்கும்
வாய்ப்பதில்லை நண்பா..

இந்தக்கவிதையை



மூடியே கிடக்கும்
கைவிடப்பட்ட வீட்டின்
ஜன்னல் கண்ணாடியுடைத்து
கம்பியில் பட்டு
மீள்கிறதொரு பந்து

கதிர்ப்பாதம் வைத்து
சூரியன்
உட்பிரவேசித்ததும்
இந்தக்கவிதையை
நீங்கள் அழித்துவிடலாம்.

வானவில் கவிதைகள்



1)
வானவில்லுக்கு
நாணேற்றி நிற்கும்
மின்கம்பியதிர
சீறிப்பாய்கிறது ஒரு அம்பு



2)
தலையுமில்லை வாலுமில்லை
வானோடு வளைந்து கிடக்கிறது
ஏழு வர்ண நாகத்தின்
தேகம்



3)
வானைக்கடைந்தும்
இனாம்,
ஆறு அமுதத்துக்கு
ஒரு விஷம்



4)
வரவேற்று நிற்கும்
வளைவு நுழைவாயிலென நம்பி
முன்னேறினேன் பாருங்கள்
என்னை சொல்லவேண்டும்



5)
சிலிர்த்துக்கொண்டதில்
குத்திட்டு நிற்கின்றன
மயிர்க்கால்கள்
வானவில்லில் தோய்வதான
கனவிலிருக்கும் தூரிகைக்கு



6)
வெகுநேரம் மழை பெய்து
அடம்பிடித்ததைத்தொடர்ந்து
சாக்கலெட் வாங்கித்தந்தேன்
ஜனு-வின் முகத்தில் இப்போது
வானவில்



7)
அங்கே தேடவேண்டாம்
கவிதை வரைய,
தீர்ந்து போகும்வரை
ஃபில்லர் அழுத்தி
எல்லா நிறங்களையும் உறிஞ்சிக்கொண்டது
நான்தான்

14.7.11

ஒருமுறை BIRTHDAY CANDLE-ஐ ஊதுவது மாதிரி ஊதிக்கொண்டிருந்தான்

 



ஆகவே,
அசாதாரணமானது அல்ல
வாயிடுக்கில்
கிறுக்கத்தந்த CELLO PEN ஒன்று
CIGARETTE ஆகியிருக்க
'அம்மா தீப்பெட்டி வேணும்மா..' என்று
நிஷித் கேட்டுவைப்பது

இதுகுறித்து கண்டிப்பதெனில்
என்னை கண்டிக்கவும்
முறைக்கிறேன் பேர்வழி என்று
அவனை முறைக்கப்போக

எரிப்பதுபோன்று பார்வையை கக்கும்
உங்கள் கண்களை
அவன் ஒரு LIGHTER ஆக்கிக்கொள்ளவும்
வாய்ப்பிருக்கிறது மேலும்
CIGARETTE புகை உங்களுக்கு
ஒத்துக்கொள்ளாது வேறு.

13.7.11

தனதானதென்றெண்ணிய சிறகுகள்



தனதானதென்றெண்ணிய சிறகுகளை
பறித்துக்கொண்ட பகல் கனாவை
சபிப்பவன் தலைக்குள்
மின்னி அணைகின்றன
ஓராயிரம் நட்சத்ரங்கள்

அசூயை தந்த உன்மத்த நிலையில்
அவன்
பள்ளத்தாக்கில் தள்ளி கொல்லத்துணிந்தது
எதையென்றறிந்தால் சிரிப்பீர்கள்,
ஒரு காட்டுப்புறாவை!

கைகள் விட்டெறிய
புறா வானேகுவதில் குழம்பி
சற்றைக்கெல்லாம் தெளிந்து
இவ்வழியேதான் வரவேண்டும்

காத்திருக்க சர் ஐசாக் நியூட்டன் !
அவனின் அனுபவத்திலிருந்து
நீங்கள் புரியவும் ஒன்றுண்டு விதி.

சட்டென்று



சட்டென்று நொண்டுகிறது
நான் பந்தயம் கட்டிய குதிரை


றெக்கை முளைக்கிறது
என் பணக்கற்றைக்கு