29.10.12

முகத்தில் பட நடனமாடிய தேநீர் ஆவிக்கு நடுவில்


’வெயில்நதி’ சிற்றிதழ் அறிமுக மற்றும் ஆத்மார்த்தியின் சிறுகதைத்தொகுப்பானசேராக்காதலில் சேர வந்தவன்பற்றிய விமர்சன அரங்குக்கென நேற்று (28.10.2012) காலை புறப்பட்டுச் சென்று சங்கம் வளர்த்த மதுரையை அடைகையில் பிற்பகல் 2.00 மணி. இயற்கை சிவமும் அதே நேரம் மதுரையை அடைந்துவிட்டார் என்பதை போன் மூலம் அறிந்து கொண்டபோதும், இருவருமே ஒரே பேருந்து நிலையத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டு பேசிக்கொண்டோம் பாருங்கள்,

எங்கே நிக்கறீங்க சிவம், தியாகு’-வில் தொடங்கி, பஸ் ஸ்டாண்டுக்கும் எதிர்த்தாற்போல், வசந்தம் ஹோட்டல், போலிஸ் ஸ்டேஷன், ஆட்டோ ஸ்டேண்டு, டௌன் பஸ் நிறுத்தம் என்று ஆளாளுக்கு கண்ணில் பட்ட இடங்களை சொல்லி, அடுத்தடுத்து நகர்ந்து, அடைந்து, நின்று எதிர்ப்படும் முகங்களில் நான் சிவத்தை, அங்கே சிவம் தியாகுவை தேடித்தேடி, கடைசியில் நான், ’ஆரப்பாளையம் பேருந்து நிலையம் என்று ஆர்ச் இருக்கும் சிவம், இங்கேயே நிற்கிறேன் வாங்க’ - என்ற போதுதான் சிவம் விழித்துக்கொண்டார் போல, ’தோழர், நான் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இல்ல இருக்கறேன்என்று சொன்னபோது கொஞ்சம் நீரை முகத்தில் தெளித்துக்கொள்ளலாம் போல மயக்கம் மயக்கமாய் வந்தது.

அப்புறம், பஸ் பிடித்து சிவம் ஆரப்பாளையம் வரும் வரை காத்திருந்து, அவர் வந்ததும் ஆட்டோவில் ஏறி வரச்சொல்லி, பை பாஸ் ரோடு, (ரிலையன்ஸ் ஆபீஸ் பக்கத்தில் குணா பட பாணியில் கேட்பதெனில், இதையும் எழுதணுமா...?!) அழகப்பர் ஹோட்டலில் ஆத்மார்த்தியின் அற்புதமான விருந்தோம்பல். முடித்துக்கொண்டு ஹோட்டலுக்கு வெளியேயே முக்கால் மணி நேரம் வரை அளவளாவல்.

5.00
மணிக்கு கூட்டம் எனில் அதற்கு முன்பாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வரலாம் என்று நானும், இயற்கை சிவமும் கிளம்பி கோவிலை அடைந்ததும், பைக்குள் தூங்கிக்கொண்டிருந்த இயற்கை சிவத்தின் காமிரா சோம்பல் முறித்து, எல்லா தூண்களின் சிற்பங்கள் முகத்திலும் தனித்தனியே கண் விழிப்பது என்று பிடிவாதம் காட்டியதன் அழகு, அதை தனியாய் எழுதலாம். பின்னும் 20 ரூபாய் கொடுத்து வாங்கிய சிறப்பு அனுமதி வழியில் மீனாட்சி அம்மனைத்தான் தரிசிக்க போகிறோம் என்று முன்னேறினால், பின்னர்தான் தெரிந்தது, வந்தது சிவன் சன்னிதிக்கு என்று. மீனாட்சியம்மனை தரிசிக்க இயலாது என்று தெரிந்த போது மணி 5.10.

அரை மனதாக வெளியேறி ஆட்டோ பிடித்து மூட்டா ஹாலைதொட்டதும், முகத்தில் பட நடனமாடிய தேநீர் ஆவிக்கு நடுவில், இவர்தான் ஸ்டாலின் ராஜாங்கம், இவர் எஸ்.செந்தில் குமார், இவர் பி.ஜி.சரவணன் என அடுத்தடுத்து நண்பர்களை அறிமுகம் செய்துவைத்தார் ஆத்மார்த்தி. முகப்புத்தகத்தில் அறிவிப்பை பார்த்துவிட்டு, அமர்வுக்கு எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் வருகைபுரிந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

6.00
மணிக்கு துவங்கிய கூட்டத்தில் முதலாவதாக ஆத்மார்த்தியின் சேராக்காதலில் சேர வந்தவன்சிறுகதைகளை விமர்சித்துப் பேசினார்கள் எஸ்.செந்தில் குமார், ரத்தினக்குமார் உள்ளிட்டோர். வெயில்நதி அறிமுகத்தை நண்பர் கலீல் ஜிப்ரான் செய்துவைத்தார். ஆத்மார்த்தி மற்றும் இயற்கை சிவம் ஆகியோரின் ஏற்புரையோடு அமர்வுகள் இனிதே நிறைவுற்றன.


22.10.12

இன்று




'கொஞ்சம் பென் கிடைக்குமா?'
என்று
முதல் சந்திப்பில்
நீ தயங்கி கேட்டு வைத்ததன்
நினைவுக்கு இட்டுச்சென்ற தூறல்
வலுத்து அடர்கிறது
இன்று
ஊடலுக்கு பின்னான
உன் மௌனமென.


12.10.12

எலிக்குஞ்சுகளோடு எனக்கு குரோதமில்லை


1)
குப்பை மேட்டிலிருந்து
கொஞ்சம் உயரத்தில்
சிறகடித்து
பறக்கவும் செய்த
செத்த எலிக்கு
நான்கு கண்கள்
ஆறு கால்கள்

2)

பழைய அலமாரியில்
தஞ்சமென்றான
பிதுக்கிய பற்பசை
நீளமேயிருக்கும்
எலிக்குஞ்சுகளோடு எனக்கு
குரோதமில்லை

இருளில்

பதுங்கிப் பதுங்கி
சுடவே
வளைய வரும்
கங்குகளிரண்டை அணைக்கிறேன்
ச்சூ...!