13.11.13

இரண்டு ஆடுகள்


சிறுகதைகள் குறித்த அறிவு போதாத ஒரு காலகட்டத்தில் (இப்போ மட்டும் என்ன முன்னேற்றம் நிகழ்ந்துவிட்டது?!) எழுதி கோவையில் வெளிவந்துகொண்டிருந்த அமுதம்’ சிற்றிதழில் வெளியான என் சிறுகதையிது. ஒரு பதிவுக்காக இங்கே பதிகிறேன் நண்பர்களே.



 வேறெந்த சூழலிலும் ஆட்கொள்ளாத பீதியும் நிலைகுலைவும் குறித்த நேரத்தில் வரவேண்டிய வசுந்தராவின் அழைப்பு வராத இந்தப்பொழுதில் மட்டும் ரங்கராஜனை பாடாய்ப்படுத்தியது.

ரங்கராஜன் கண்பார்வையற்றவர். கண்பார்வையில்லாததை காரணமாய்க் கொண்டு என்றுமே முடங்கி விடாமல், தன்னம்பிக்கையுடன் ஊதுவத்தி, சாம்பிராணி, மெழுகுவர்த்திகள் விற்று பிழைப்பு நடத்துபவர்.

மனைவி இந்திராணி, தலைப்பிரசவத்தில் ஈன்றெடுத்ததோடு மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டு விடைபெற்று சென்றபின்தான் குழந்தை வளர்ப்பில் மிகுந்த நெருக்கடிக் காலகட்டங்களை ரங்கராஜன் அனுபவித்தார். அக்கம்பக்கத்தினரின் வாஞ்சையின் உதவி கொண்டே, வசுந்தராவை ஆறு வயதுவரை வளர்த்தெடுத்தவர், அதன்பின் வெளியூரில் விடுதியோடமைந்த பள்ளியொன்றில் அவளை சேர்த்துவிடுவது  உசிதம் என முடிவெடுத்தார்.

ஆயிற்று, இன்றோடு 19 வருடங்கள் முடிவடைந்து, கல்லூரியின் மூன்றாமாண்டை துவக்கியிருக்கிறாள் வசுந்தரா.

தேர்வு விடுமுறைக்காலங்களை மட்டும் தந்தையுடன் கழித்துவிட்டுத் திரும்பும் அந்த துயர்மிகு தருணங்கள் பிரிந்து சென்றும் ஓரிரு நாட்கள் வரை அங்கும் இங்குமாய் இருவர் கண்களும் குளமாய் பெருகித்தான் பின் நாட்பட வற்றும். இடைப்பட்ட தினங்களில் இருவரையும் சமாதானத்தில் வைத்திருப்பது, தொலைபேசி அழைப்புக்களும், உசாவல்களும்தான்.

தனியாய் வளர்கிற பெண், தான்தோன்றித்தனமாய் வளர்ந்துவிடக்கூடாது என்கிற கவலை ரங்கராஜனின் மனதிலிருந்தாலும், அதையும் கடந்து அவள் திருத்தமாய் வளர்வதை கல்லூரி ஆசிரியர்கள் மூலமும், விடுதி நிர்வாகிகள் மூலமும் அறிய வருவதுதான் அவருக்கு நிம்மதி தருவது.

வசுந்தராவும் ரங்கராஜனின் அன்புக்கும் பேணுதலுக்கும் சற்றும் சளைத்தவளல்ல. எவ்வித மனச்சிதறல்களுக்கும் இடங்கொடுக்காமல் தந்தையின் ஆசைகள் குறித்தும் தன் கல்வி குறித்துமே இலக்குகளை உருவாக்கிக் கொண்டு, தன் வழியில் அடிகளை முன்னெடுத்துச்செல்பவள். தோள்பைகளில் சுமந்து, கடை கடையாய், வீடு வீடாய் ஊதுவத்திகளும், மெழுகுவர்த்திகளும் விற்று ரங்கராஜன் அனுப்பி வைக்கும் ரூபாய்த்தாள்களில் அவரின் அன்பும் பிரியமும் ஒருசேர சுகந்தம் கிளப்புவதை அவள் அறிவாள். அதுமட்டுமன்றி அச்சுகந்தத்தை ரங்கராஜன், தனது தூதாக்கி அவளிடத்தில் நன்னடத்தையையும், நேர்மையையும் வலியுறுத்துவதாய் தானே கற்பனை செய்தும் கொள்வாள்.

எல்லா மாணவிகளும் எடுத்துச்செல்வது போல் வசுந்தராவுக்கும், கைப்பேசி மீது விருப்பமிருக்கும் என்றுதான் சென்ற முறை விடுமுறையில் வந்திருந்த வசுந்தராவிற்கு மாதத்தவணையில், அதிகம் விலைமதிப்புள்ள நிழற்படமெடுக்கும் வசதி பொருந்திய கைப்பேசி ஒன்றை வாங்கித்தந்தார் ரங்கராஜன். ஆயினும், அழைப்புக்களின்போது தொலைபேசி நிலையத்தை அணுகுவதில் ரங்கராஜனுக்கிருக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு ரங்கராஜன் எவ்வளவு சொல்லியும் கைப்பேசியை அவர் வசமே திருப்பித்தந்திருந்தாள் வசுந்தரா.

நாளும் காலை மாலை இரு வேளையும் பேசிக்கொள்வது வழக்கம். ஆனால் இன்று காலையிலிருந்து மாலை வரை அழைப்பு வராததில், ரங்கராஜன் மனம் தவித்தது. என்ன ஆயிற்றோ எனத்துவங்கி பலவாறாகச் சிந்தித்து மனம் குழம்பியபடி அமர்ந்திருக்க, விற்பனை முடித்து வீடு திரும்புகையில் தெருவோரக் கடையில் வாங்கி வந்திருந்த இட்லிப் பொட்டலத்தை பிரித்து சாப்பிடவும் மனம் வரவில்லை.

வாசலில் யாரோ மிதிவண்டி நிறுத்தும் அரவம் கேட்டு நுழைவாயிலின் திசை உணர்ந்து திரும்பினார் ரங்கராஜன்.

யாரு முருகேசனா… என்றார் கணித்தவராய்.

‘ஆமாம் அண்ணே, வசுந்தரா கண்ணு ஏழெட்டு தடவை போனில் அழைச்சும் நீங்க எடுக்கலையாம். பதறிப்போய் எனக்கு போன் போட்டுது. ன்னு அழுது பாவம். என்ன விபரம்னு கேட்டுட்டு போகத்தான் வந்தேன்…’ - முருகேசன் சொல்லி முடிக்கவும் துணுக்குற்றார் ரங்கராஜன்.

அப்படியா… இல்லையேப்பா, அழைப்பு வந்தமாதிரியே தெரியலையே… நானும் பதறித்தான் போருக்கேன் முருகேசா…என்றவாறே தன் சட்டைப்பையிலிருந்த கைபேசியை பரபரப்பாய் துழாவி எடுத்து முருகேசனிடம் நீட்டினார்.

வாங்கிக்கொண்ட முருகேசன், கைப்பேசியின் திரையில் தவறிய அழைப்புக்களின் எண்ணிக்கை ஏழு என்று காண்பித்ததை கண்டதும், ‘பாப்பா அழைச்சிருக்கு அண்ணே…என்றார்

அப்போ ஏன் மணியடிக்கலை முருகேசா…?

சரிதான் போன் ‘சைலண்ட் மோட்’-ல் இருக்கு, அது தெரியாம, அப்பா எடுக்கலையேன்னு பாவம் அந்தப் பொண்ணு துடியா துடிச்சிருச்சு…

முருகேசன் அந்தக் கைபேசியிலிருந்தே வசுந்தராவிற்கு அழைப்பு விடுத்தார்.

இந்தாங்கண்ணே பேசுங்க…

முருகேசனின் கையைத்தடவி கைப்பேசியை வாங்கிக்கொண்ட ரங்கராஜன் அவசர அவசரமாய் தன் காதில் பொருத்திக்கொண்டு எதிர்முனையில் வசுந்தரா இணைப்பில் வருமுன்னே ‘வசுந்தரா வசுந்தரா..என அரற்றினார். இணைப்பில் வந்த வசுந்தராவும், தழுதழுக்க ‘அப்பா… அப்பா..என பேசத்திணறுவது புரிந்தது முருகேசனுக்கு.

அழுவது தவிர அவர்களால் வேறெதுவும் பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள் மீண்டும் ஓரிடத்தில் சந்தித்துக்கொள்ளும்போது அவைகளுக்கிடையே உணர்ச்சிப் பெருக்கில் நிகழும் பரிபாஷையிருந்தது அவர்களின் விசும்பலில்.

நன்றி: அமுதம் - திங்களிதழ்
செப்டம்பர்-2010



4.11.13

பள்ளிப் பருவத்துப் பட்டாம்பூச்சி




பதினெட்டாம் பக்கத்துக்கும்
பத்தொன்பதாம் பக்கத்துமிடையில்
சிறைபட்டிருந்தது
இத்தனை நாளும்
யதேச்சையாய் விரிக்கப்பட்ட
பழைய பாடப் புத்தகத்திலிருந்து
விடுபட்டு
காற்றில் அலைகிறது

தலைக்குத் தடவிய
எண்ணையை
காகிதத்தில் தோய்த்து
நகலெடுத்து வரைந்த
பள்ளிப் பருவத்துப் பட்டாம்பூச்சி.