23.12.14

ப. தியாகு அவர்களுக்கு - தோழமையுடன் நக்கீரன்





லிக்குஞ்சுகளோடு எனக்கு குரோதமில்லைதொகுப்பு குறித்து கவிஞர் திரு நக்கீரன் அவர்களின் கருத்துரை. நன்றி நக்கீரன் சார்...

******

விஞர் . தியாகு அவர்களுக்கு,

தோழர். சிவராமன் மூலமாக தங்களின்எலிக்குஞ்சுகளோடு எனக்கு குரோதமில்லைதொகுப்பு கிடைத்தது. நேற்றுதான் வாசித்து முடித்தேன். ஒரு படைப்பாளியாகவே இன்னமும் நீடிப்பதால் விமர்சன அறிவு வாய்க்கவில்லை. எனவே கருத்துரையாகவே இத்தொகுப்பு குறித்து பேசலாம் என நினைக்கிறேன்.

அலைவுறுவதை

குறைத்துக்கொண்டே வந்து

நிலைக்கு வந்துவிட்ட ஊஞ்சலிலிருந்து

இறங்கிக்கொண்டது குழந்தை.



பாகை 90க்கு

திரும்பிவிட்டிருந்தது பூங்கா

தொடக்கநிலை கவிஞர்கள் அனைவரும் இந்த பாகை 90க்கு கவிதை சென்றுவிடாதிருக்க முயற்சித்தாலே போதும். கவிதையும் கவிஞர்களும் நின்று விடலாம். நீங்கள் நின்றுவிட்டீர்கள். அலைவுறுதலின் வேகத்தில்தான் வேறுபாடு. இது எல்லா முதல் தொகுப்புக்கும் நேருவதுதான். தொடர்ந்து அலைவுறும் பெண்டுலம்தான் கடிகாரமாய் நீடிக்கிறது. கவிஞனும் கடிகாரமும் ஒன்றுதானே?

எனக்கு நெருங்கிய சக படைப்பாளிகளிடத்து வெளிப்படையாகவே கருத்துக்களை தெரிவிப்பது எனது வழக்கம். எல்லாவற்றையும் பாராட்டுவது படைப்பாளிக்கு உற்சாகத்தை தரும் என்பது உண்மைதான். ஆனால் அது படைப்பூக்கத்தை குறைத்துவிடும் என நம்புபவன் நான். குறிப்பாக முதல் தொகுப்பில் நிறையும் குறையும் கலந்திருக்கவே செய்யும். கொஞ்சம் காலம் கழிந்தால் இக்குறைகள் மற்றவர்களைவிட  எழுதிய கவிஞருக்கே நன்றாக தெரியும். வாய்ப்பு கிடைத்தால் இப்போது என்னுடைய  தொகுப்பிலிருந்து  நான் பத்து கவிதைகளை தயக்கமின்றி நீக்கிவிடுவேன்.

உங்கள் தொகுப்பில் ‘8 நிமிட ஒளித்தொலைவு’ ‘பாகை 90’ ’12 சதுர அடி’ ‘மைனஸ் 5.88’ என்ற எண்கள் கலந்திருக்கும் கவிதைகள் எல்லாம் சிறப்பாக வந்திருப்பதை பார்க்கிறேன். எண்ணும் எழுத்தும் கலக்கும் மேஜிக் உங்களை எப்படியோ ஈர்த்திருக்கிறது. அதனால் கவிமனம் அங்கு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இதுபோலவே பல கவிதைகள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட இடத்தோடு முடிந்திருக்க வேண்டிய அக்கவிதைகள் இன்னும் நீண்டு நவீனக் கவிதையை புதுக்கவிதையாக சுருக்கி விடுகிறது. எடுத்துக்காட்டுக்கு சில:

தாக்கவென – 2வது பத்தியோடு முடிந்துவிட்டது
இரவு பகல்முதல் பத்தியோடு
பைத்தியத்தின் வானம்முதல் பத்தியோடு.
குமிழ்கள் அல்ல கிரகங்கள்முதல் பத்தியோடு
பள்ளி பருவத்து பட்டாம்பூச்சி – 2வது பத்தியோடு

அதே சமயம்என் வரவேற்பறையில்…’ ‘இந்த கவிதையை’, ‘தேகம்போன்ற கவிதைகள் முழுமை நிலையை எட்டி நிறைவடைந்திருக்கின்றன. ‘யானை’, ‘கௌதம் ஆன சித்தார்த்இரு கவிதைகளையும் எழுது முறையில் கொஞ்சம் கவனம் செலுத்தி செதுக்கியிருந்தால் உங்களுக்கு பேர் சொல்லும் கவிதைகளாக மாறியிருக்கும். முதல் தொகுப்புதானே அடுத்தடுத்து சரி செய்துக் கொள்ளலாம். ஆனால் டம்ளருக்குள் சிறுநீர் பீய்ச்சும் படிமங்களை மனமென்னும் வாழைக்குருத்துபோன்ற உருவகங்கள் காலி செய்துவிடும். எச்சரிக்கை.

இத்தொகுப்பில் விரவியுள்ளதேங்கி கிடக்கும் நீர்படிமம்தான் கவிஞரின் கவிமனம். அதில்கான யானைபிம்பத்தை நன்கு கண்டுக் கொண்டுவிட்டீர்கள். அதில் உங்கள் விரல் நுனிக்கொண்டு ஒரு வழி கண்டுப்பிடித்து  தாருங்கள் போதும்.

ஹே குட்டி

கண்கள் திறந்தாயிற்றா

வாழ்த்துக்கள் தியாகு

தோழமையுடன்
நக்கீரன்

எனதன்பு தியாகு - சுந்தர்ஜி

 எனது முதல் கவிதை நூல் ’எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை’க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் விருது அறிவிக்கப்பட்டதறிந்து எனது பிரியத்துக்குரிய ஆசான் திரு சுந்தர்ஜி அவர்கள் எழுதியது. குறிப்பாக சுந்தர்ஜியிடமிருந்து வரும் அபிப்பிராயங்களே முக்கிய விருதென நினைக்கும் என்னை கீழ்காணும் வரிகள் இப்பவும் பரவசத்தில் வைக்கின்றன. இந்த கடிதத்தை பத்திரப்படுத்த இன்றைக்குத்தான் தோன்றியது  சற்றே  வருத்தம் தருகிறது என்றாலும், இதை செய்துவிட்டது நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. நன்றி ஜி..!

*******
னதன்பு தியாகு,

உங்கள் நூல் ”எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை”க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் விருதைப் பெற்றிருப்பதான செய்தியை மிகத் தாமதமாக அறிகிறேன். விருதுகளோடு படைப்பாற்றலை நான் ஒருகாலத்திலும் பொருத்திப் பார்ப்பவன் இல்லை என்ற போதும், மிகச் சரியான பருவத்தில், மிகவும் தகுதியான படைப்புகளுக்கு மிக அபூர்வமாகவே கௌரவமும், அங்கீகாரமும் வாய்த்திருக்கின்றன.

உங்கள் தொடர்பு வாய்த்த நாட்களில் இருந்தே பார்க்கும் கோணங்களாலும், எழுதும் மொழியாலும் புதுத் தடம் அமைத்ததை நான் வாசிக்க நேர்ந்த முதல் கவிதையிலிருந்தே உணர்ந்திருக்கிறேன். உருவாக்கும் பிரயத்தனத்தை உடைத்து, பாசாங்கில்லாத சொற்களால் கவிதையை மெருகூட்டும் உங்கள் படைப்பாற்றலுக்கும், உங்கள் பணிவுக்கும், மேன்மைக்கும் தகுதியானது இந்த விருது.

புத்துணர்வால் மலர்த்தும் செறிவான உங்கள் கவிதைகள் பயணிக்கும் பாதையில் நானும் உடன் வந்து கொண்டிருப்பேன். நிறைவான உடல்நலத்தையும், மனநலத்தையும், நல்ல சூழலையும் இறைவன் உங்களுக்கு அருளட்டும்.
  
- சுந்தர்ஜி ப்ரகாஷ்
   13.10.2014

22.12.14

நான்கு கவிதைகள்



1)
நுழைந்தது தவிர
வெளியேறுவதற்கென்று
கதவைக் கொண்டிராத
புறத்தேயும்
இருளண்டிய வீடு

பற்றியெரியும் அறையொன்றிலிருந்தெழும்
கூக்குரலை உள்ளுணர்ந்து
நோக்குகையில்
எதிர்ப்படும்
முகமற்ற முகம்

கம்பிகளற்ற ஜன்னலுக்குள்
ஒடுங்கும்
மருளும் ஜோடி விழிகள்


2)
யாருக்கும்தான் அது
வர்த்திச் சுருள்

நானதை
முள்ளொன்றுக்கே
கிரீடம் வைத்தேன்

வட்டப்பாதையில்
கனன்று கனன்று
இந்த இசைத்தட்டு கசியும்
பாடலில்லையேல்

கொசுக்கள் பாய்ச்சும்
முள் கரண்டிகளுக்கு அலறி
கெடுத்திருப்பேன்
எவரது உறக்கத்தையும்


3)
தீண்டலுக்கு ஆட்பட்ட
உணர்கொம்புகள் இயக்க
கூட்டிலிருந்து வெளிவரும்
நம் நத்தைகள்


4)
வருடித் திளைக்க
வாய்க்காதபடி
மலைகள் மீது தவழ்ந்திருக்கும்
ஓர் மேகம்

என்
ஐந்து கதிரிடமும்
கேட்டுக்கொண்டேன்

பாலாடையைக்
களைவதுபோல் இருக்கட்டும்


11.12.14

இரண்டு கவிதைகள்



1)
இரு குன்றுகள் சரியும்
அவளின்
நிலத்துக்கும் மேலேயொரு
வானம்

சிறகசைப்பை நிறுத்தி
மிதந்துகொண்டிருக்கிறேன்
விலகாமல்

2)
பகலைக் கச்சவிழ்த்த
ஒற்றை முலை
சுரக்கிறது வானில்